ss

Tuesday, May 31, 2016

எனது மொழி ( 219 )

துன்பத்தில் இன்பம்....

எந்த அளவு நல்லவராக உலகில் வாழ நினைக்கிறோமோ அந்த அளவு துன்ப துயரங்களை அனுபவித்தே ஆகவேண்டும்...

காரணம் தங்கள் வாழ்வில் மட்டுமல்ல வெளி உலகில் நடக்கும் தவறுகளையும் நினைந்து நல்லோர் வருந்துகிறார்கள்..

 எது பற்றியும் கவலைப் படாதவர்களாக இருப்பதால் நல்லோரின் அளவு கெட்டவர்கள் துன்பங்களை  உணர்வது இல்லை...

ஆனால் நல்லோருக்கு துன்பத்திலும் இன்பம் காணும் வாய்ப்பு இருக்கிறது...

மற்றவர்களுக்கு அது இல்லை!..

Thursday, May 19, 2016

எனது மொழி ( 218 )

மானம் வருமா?...
இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு மக்களுடைய அரசியல் தகுதியை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது!
ஆண்ட கட்சி மீண்டும் வெற்றி பெற்றது ஆச்சர்யம் இல்லை! எதிர்பார்த்ததே!..
ஆனால் அதன் எதிரி கட்சி இந்த அளவு வெற்றிபெற்றது எதிர்பாராதது!...
மற்ற அனைவரும் துடைத்தெறியப்பட்டதும் அப்படியே!..
ஆக தமிழ்நாட்டு மக்கள் உலகுக்கு ஒரு கேவலமான முன்னுதாரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்கள்!...
மாற்று சிந்தனை இப்போதைக்கு இல்லை!
மானமுள்ள வாழ்க்கைக்கு வழியே இல்லை!...

Saturday, May 14, 2016

எனது மொழி ( 217 )

இது சத்தியம்!... நாடு முழுக்க உள்ள நேர்மையான சமூக சிந்தனையாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் விமோசனத்துக்கான திட்டத்தை வகுத்து அதை நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டும்... அதன் வழிகாட்டுதலில் வளரும் சக்தி இப்போதுள்ள அவலங்களை ஒழித்துக்கட்டி நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதைவிட வேறு வழி நிச்சயம் இல்லை .. அதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் அத்தனையிலும் மக்கள் தொடர்ந்து தோல்விதான் அடைவார்கள்! இது சத்தியம்!....

Thursday, May 12, 2016

எனது மொழி ( 216 )

உரிமையும் கடமையும்....
ஒரு எம் எல் ஏ வுக்கு தனது தொகுதி மக்களுக்கான தேவைகளைத் தீர்த்துவைக்கத் தேவையான முடிவெடுக்கும் அதிகாரமும் நிதியாதாரமும் உத்தரவிடும் அதிகாரமும் இருக்கிறதா?.. இல்லை - என்றால் ஒரு எம் எல் ஏ அவரது தொகுதியில் எதுவும் செய்யவில்லை, என்று குற்றம் சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது? ஒட்டுப்போடுகின்ற எத்தனை பேருக்கு தான் ஓட்டுப்போடும் எம் எல் ஏ வின் கடமைகளும் உரிமைகளும் பற்றித் தெரியும்? அப்படித் தெரியாதென்றால் அவர்களால் எப்படி ஒரு தகுதியான நபரைத் தேர்வு செய்ய முடியும்?... நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு கட்சி நிறுத்தும் ஒரு கொலைகாரப் பொறுக்கியை ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் எதிர்த்து நின்று வெல்ல முடியுமா?.... இது என்ன ஜனநாயகம்? இது என்ன தேர்தல்?...

Tuesday, May 10, 2016

எனது மொழி (215 )

இரு!.....எப்படி?..

தனித்திரு! பசித்திரு! விழித்திரு என்று அடிக்கடி கருத்துரைக்கப்படும்...

ஆனால் அதன் பொருள் என்ன என்று விளக்கம் கொடுப்போர் பெரும்பாலும் கூர்மையான அறிவை முனை மழுங்கச் செய்யும் வித்தத்தில் மூட நம்பிக்கை அடிப்படையிலான புரியாத விளக்கங்களை மட்டுமே சுவையாகக் கொடுப்பார்கள்...

உண்மையில்.....

எந்த ஒரு தவறான உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் தான் வாழ்க்கை நெறியாகக் கொண்ட சத்தியத்தில் உறுதியாக இரு என்பதே தனித்திரு என்பதன் பொருள்....

எண்ணற்ற தத்துவங்களைக் கற்றிருந்தாலும் மேலும் மேலும் அறிவுப் பசி இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே பசித்திரு என்பதன் உண்மையான பொருள். .....

தான் சரியான பாதையை விட்டு இடரும் நிலை ஏற்ப்பட ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே விழித்திரு என்பதன் பொருள்..

இப்பொருள் உணரப்ப்படுமா?....

எனது மொழி (214)

எனது ஒட்டு யாருக்கு?...

நண்பர்களே!....

தேர்தலுக்கு முன்பே தனது மக்கள் பணியால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்......

அனைத்துக் கட்சிக்காரர்களையும் அனைத்து மக்களையும் ஒரேமாதிரி நேசிப்பவர்......

வாக்காளர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கடமைகளையும் உரிமைகளையும் நன்கு உணர்ந்தவர்...

உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல்வரை நன்கு கற்றவர்....

உலகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றவேண்டும் என்ற தணியாத தாகத்தை உடையவர்....

சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் தூய்மையானவர்....

எந்த நிலையிலும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் விலைபோகாத நேர்மையாளர்.....

அக்கிரமங்களையும் அநீதியையும் ஊழலையும் சகித்துக் கொள்ளாதவர்....

தேர்தலில் தனது சொந்தப் பணத்தையோ பிறரிடம் வசூல் செய்த பணத்தையோ கொண்டு பிரச்சாரம் செய்யாதவர்.....

ஊர் ஊருக்கு தான் மக்கள் பிரதிநிதி ஆனால் தனது கடமைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்கும் வகையில் சில துண்டறிக்கைகளை மட்டும் பொது மைதானத்தில் பார்வைக்கு வைத்துவிட்டு தனது அன்றாட வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்...

வெற்றியா தோல்வியா என்பதைப் பிறர்மூலம் அறியும்வரை அது பற்றிக் கவலைப் படாமல் தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்....

எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தனது கடந்த கால நன்னடத்தைகளை மக்களிடம் நிரூபித்தவர்....

இப்படிப்பட்ட ஒருவருக்கே எனது வாக்கு கிடைக்கும் நண்பர்களே!...

அப்படி வாக்களிக்க வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அப்படிப்பட்டவர்கள் இல்லாத ஒரு நிலையில் நடக்கும் தேர்தல்கள் நாசமாய்ப்போகட்டும்!....

எனது வாக்குரிமையை வீணருக்கு ஒருக்காலும் அளிக்க மாட்டேன்....

உங்கள் வாக்கு?....

Saturday, May 7, 2016

எனது மொழி ( 213 )

தேர்தல்!..

ஆடுகளுக்காக ஒரு தேர்தல் நடந்ததாம்....
ஆனால் வேட்பாளர்களாக நரிகள் மட்டுமே நிற்க முடிந்ததாம்...
பல புத்திசாலி ஆடுகள் சொல்லிச்சாம்......
அட முட்டாள் ஆடுகளே! ஓட்டுப்போடும் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க அப்படின்னு!....
ஆடுகளும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நரிகளிடம் காசு வாங்கிக்கொண்டு வீறுநடைபோட்டுப் புறப்பட்டுக்கிட்டே இருந்ததாம்...
ஒவ்வொரு தேர்தலிலும்....

Friday, May 6, 2016

எனது மொழி ( 212 )

ஒண்ணுமே புரியலே!.....

மனித இனத்தை அனைத்து உயிரினங்களையும்விட மேலானவனாக இறைவன் படைத்திருக்கிறான் என்கிறார்கள்...

ஒரு சந்தேகம்....

மனிதனைவிட  பிற உயிரினங்களுக்கு அதிகம் தீங்கு விளைவித்த....

மனிதனைவிட இயற்கைக்கு அதிகம்  தீங்கு விளைவித்த.....

மனிதனைவிடத் தனது இனத்துக்குத் தானே  அதிகம்  தீங்கு விளைவித்த,..

ஏதாவது ஒரு உயிரினத்தைச் சொல்ல முடியுமா?..

முடியாதென்றால் இப்படிப்பட்ட மாபாதக இனத்தை மேலானவனாகப் படைத்தான் இறைவன் என்று சொல்வது மாபெரும் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறோமா?...

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதே இயற்க்கையில் நடந்த ஒரு பெரிய விபத்து என்பது எனது கோட்பாடு ! அதனால் மனித இனம் அழிவதே அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நல்லது....

இந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் மனித வாழ்க்கை இயற்கைக்கும் பிற உயிரின வாழ்க்கைக்கும் பேராபத்தாக இல்லாமல் உதவிகரமாக மாற்றப்பட வேண்டும். தவிர்க்கமுடியாத இயற்கைத் தேவை இருந்தால்தவிர பிற உயிரினங்களை அழித்தல் கூடாது...

இது நடக்குமா?

Monday, May 2, 2016

எனது மொழி ( 211)

ஒழுக்கம்....

ஒழுக்கம் என்றால் அதைப் பெரும்பாலும் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயமாகவே பார்க்கிறார்கள்...

அது சரியானது அல்ல!

மிகச் சிறந்த வாழ்க்கைப் பண்புகளைக் கொண்டிருப்பதே ஒழுக்கம் என்பதன் உண்மையான பொருள் ஆகும்!...

எந்த அளவு சிறந்த பண்புகள் நிறையக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் எனலாம்.

எந்த அளவு சிறந்த பண்புகள் குறைவாகக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்திலும் தாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்!...