ss

Sunday, December 31, 2017

எனது மொழி (233)

உண்மையான தேசபக்தர்களும் சமூக சிந்தனையாளர்களும் தமிழ்நாட்டு நிலையை நினைத்து இன்று அடையும் துயரை நான் பகிர்ந்து கொள்கிறேன்

இப்போது நடப்பவற்றையும் இனி நடக்கப்போகின்றவற்றையும் நினைத்து தலைகுனிகிறேன்!

நாடும் நல்லோரும் தலைநிமிரும் காலம் வரட்டும்!


Thursday, December 28, 2017

எனது மொழி (232)

காரணம் என்ன?

கடவுள்வேறு நாம்வேறு அல்ல,  நாம் உட்பட அனைத்தும் இறைவனின்  ஒரு அங்கமே  என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பொருந்தும் உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை தருகிறது.

இறைவன் அனைத்துக்கும் அப்பாற்பட்ட அனைத்தையும் தோற்றுவித்த அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற மாபெரும் சக்தி என்பதை அடிப்படையாகக் கொண்ட முரண்பட்ட எண்ணற்ற கோட்பாடுகளையும் கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் எந்த ஒரு கேள்விக்கும் அறிவுபூர்வமான பதிலைச் சொல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது.

அதன்மூலம் மக்களை அறியாமை இருளில் காலங்காலமாக வைத்திருக்கிறது.

நன்கு சிந்திக்கத் தெரிந்த அறிஞர்கள்கூட இந்தப் போலித்தனத்தை உணர ஏன் தவறுகிறார்கள் என்பது ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது.

அறியாமை, அச்சம், சுயநலம் இம்மூன்றையும் தவிர இதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? 

Tuesday, November 21, 2017

உணவே மருந்து (101)

உடல் பருமன் ஒரு வேறுபட்ட பார்வை! போதுமான சத்துணவு கிடைக்காமல் நோஞ்சானாகவும் அது சம்பந்தமான நோய்களுடனும் வாழும் எத்தனையோ பேர் இருக்க மிகை உணவாலும் உடலுழைப்புக் குறைவாலும் மிகையான உடல் எடையுடனும் அது தொடர்பான நோய்களுடனும் வாழ்பவர்களும் உலகில் மிதமிஞ்சி அதிகரித்து வருகிறார்கள்/ மிகு எடையைக் குறைக்க என்னதான் விரும்பினாலும் எத்தனையோ வழிகள் பற்றி ஆராய்ந்தாலும் அதில் வெற்றி பெறுபவர்களை விட ஏராளமாகப் பணத்தையும் செலவு செய்தும் பல முயற்சி செய்தும் தோல்வியடைந்து மன உழைச்சலுடன் வாழ்பவர்கள்தான் நிறைய இருக்கிறார்கள். ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். எடைக் குறைவானவர்கள் நோயில் வீழ்பவர்களும் இருக்கிறார்கள். எடை அதிகமானவர்கள் நீண்டகாலம் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் எடை அதிகமாக இருப்பது நல்லது என்று எடுத்துகொள்ளக் கூடாது. எடை குறைவாக உள்ளவர்களுக்கு நோய் வருகிறது என்றால் அந்த எடைஉள்ள உடம்பை நன்கு நோயின்றி வைத்துக்கொள்ளக்கூட இயலாத அளவு மோசமான உணவு மற்றும் உழைப்புப் பழக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பொருள்! எடை அதிகமாக உள்ள பலர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அந்த எடை இருந்தாலும் நோயின்றி வாழும் அளவு நல்ல உணவு உழைப்புப் பழக்கத்தைக் கடைப் பிடிக்கிறார்கள் என்று பொருள்! அப்படியானால் செய்யவேண்டியது என்ன? உடல் எடை குறைவாக உள்ளவர்கள் அந்த சாதகமான நிலையை நோயற்ற வாழ்வாக உறுதிப்படுத்த தகுந்த உணவுப் பழக்கத்தையும் உழைப்பு அல்லது உடற்பயிற்சியையும் தவறாது பின்பற்றினால் போதுமானது. ஆனால் உடல் எடை அதிகமானவர்கள் விஷயம் வேறு. அவர்களின் உணவு மற்றும் உழைப்பு செயல்பாடு வேறு விதமாக இருத்தல் வேண்டும். காரணம் அவர்களின் அதிக எடை உள்ள உடல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அளவான எடை உள்ளவர்களைவிட அதிக உணவைக் கேட்கும். அவர்களின் நுரையீரல் அளவான எடை உள்ளவர்களைவிட அதிகமான காற்றை உள்ளிழுத்து ஆக்சிஜனைப் பிரித்து ரத்தத்தில் சேர்க்கவேண்டும். அவர்களுடைய இதயம் அளவான எடை உள்ளவர்களுடையதைவிட அதிகமான ரத்தத்தை உடல் முழுவதும் இருந்து இழுத்து நுரையீரலுக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்து மீண்டும் உடல் முழுக்கச் செலுத்தும் கடினமான பணியைச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல ரத்தம் எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் எல்லாம் தடையின்றி எடுத்துச் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். அதே போல மற்ற அவையங்களும் மிகு எடைக்கு ஏற்றதாக அதிக வேலைப்பழுவை ஏற்று இயங்க வேண்டும். அதற்கு எடையில் எப்படி சராசரி மனிதனை விடக் கூடுதலாக இருக்கிறார்களோ அதே மாதிரி உணவுக் கட்டுப்பாட்டிலும் உழைப்பிலும் கூடுதல் பாரத்தை ஏற்றே ஆக வேண்டும். ஆதாவது எவ்வளவு கூடுதல் எடை இருக்கிறார்களோ அந்த அளவு கூடுதல் முயற்சியும் பயிற்சியும் எடுத்தால் உடல் இயக்கத்தைப் போதுமான அளவு நோயின்றி வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் எடுத்துக்கொள்ளும் சத்துக்களைவிட அதிகமாக செலவு செய்யும் விதத்தில் உணவு உழைப்புப் பழக்கத்தை வைத்துக்கொண்டால் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உடம்பு சதாகாலமும் கொஞ்சம் பசி உணர்வுடன் இருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டால் மெதுவாக உடல் எடை குறையும். அது கடினமாக இருந்தால் இருக்கும் எடையைவிட அதிகம் ஆவதற்கு விடாமல் மிகச் சிறப்பான நிலையில் பராமரித்துக்கொண்டு வந்தால் போதுமானது. மிகக் குறைவான அளவு எடைக்குறைப்பு நடந்தாலும் நாளடைவில் இயல்பான எடைக்குக் கொண்டு வரவும் முடியும். முடியாவிட்டாலும் பயமில்லை. சற்றுப் பருமனாகவே நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம்!

கடைசியாக ஒரே ஒரு செய்தி! ஆதாவது முழுமையான இயற்கை உணவுக்கு மாறும் பருமனான ஒருவர் எவ்வளவு உண்டாலும் அவருடைய எடை குறைந்தே தீரும்! காரணம் அவருக்குத் தேவையான அளவு சத்துக்களைக் கொடுக்குமளவு இயற்கை உணவை அவரால் எடுத்துக்கொள்ள முடியாது! முடிந்தால் முயற்சிக்கலாம்!

Saturday, November 18, 2017

எனது மொழி ( 231 )

நான் 
ஆதாவது பெருவெடிப்பால் உருவான பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களாக முடிவற்ற திசையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களுடன் சுழன்றுகொண்டே பயணித்து வருகிறது.

ஒவ்வொரு நட்சத்திரமும் தன்னைத்தானே சுழன்றுகொண்டும் தான் அங்கம் வகிக்கும் நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து சுழன்று கொண்டும். இருக்கிறது.

அதே மாதிரி ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பல கோள்களும் அந்தக் கோள்களை எண்ணற்ற துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன.

இத்தனையுமாக வேடந்தரித்திருக்கும் அளவிடமுடியாத அணுக்களின் கூட்டமும் தன்னுள் எண்ணற்ற இயக்கங்களைக் கொண்டு உள்ளன.

இதன் ஒரு அங்கமாக நாம் வாழும் பூமியும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் சூரியனையும் சுற்றிக்கொண்டும் பால்வெளி மண்டலத்துக்குள்ளும் சுற்றிக்கொண்டும் பிரபஞ்சப் பயணத்தையும் தொடர்ந்துகொண்டு தனித் தன்மையுடன் உள்ளதல்லவா?

அந்த பூமியின் இயக்கத்துக்கு இணையானதுதான் நான் என்கிற உணர்வு ஆகும்.

அது தனக்குத் தானேயும் இயங்கும் .

தன்னைச் சுற்றி நடக்கும் பேரியக்கத்திலும் ஒரு அங்கமாகவும் விளங்கும் .

பூமி ஒன்றாக இருந்தாலும் அதனுள் மா
கடல்களும் பெரும் மலைகளும் பிரளயங்களும் பசுமையான காடு வனங்களும் எண்ணற்ற உயிரினங்களும் அவற்றுக்குண்டான இயல்புப்படி இயங்குவதுபோலவே நான் என்கிற உணர்வும் எண்ணற்ற விதமாக எண்ணற்ற பண்புகளுடன் வெளிப்படக் கூடியது.

அந்த இயக்கத்தைத் தாங்கி நிற்கும் மையமான பரு உடலானது அதன் இயக்கத்தை நிறுத்தும்போது அதில் அடங்கியுள்ள நான் என்கிற விசையும் நின்று போகிறது!

அதுதான் நான்!

Sunday, November 12, 2017

எனது மொழி (230)

லட்சுமி
- குறும்பட விமர்சனம்.....

கடந்த சில நாட்களாக லட்சுமி என்கிற குறும்படம் சமூக வலை தளங்களில் அதிகம் பேசப்படும் விசயம் ஆகிவிட்டது!

இயந்திரகதியில் சுவையின்றிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு குடும்ப வாழ்வில் மனைவி  எதிர்பார்க்கும் எதுவும் கணவனிடமிருந்து கிடைக்கவில்லை.

ஊர் உலகத்துக்காகவும் வாழ்ந்து தீரவேண்டும் என்பதற்காகவும் வாழும் ஒரு வாழ்க்கை..

இதில் கணவனுக்கு வரும் ஒரு போன் கால் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்பதே காரணம்.

அதற்காக அவள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

காரணம் கடந்த காலத்தில் அவளும் அப்படிப்பட்ட தவற்றைச் செய்துவருவதே அதற்குக் காரணம்.

அதற்காக அவளோ அவனோ கற்பித்துக்கொண்ட காரணங்கள் சரியாக இருந்திருந்தால் இருவரும் தங்கள் வழியில் தொடர்ந்து நடந்திருக்கவேண்டும்.

ஆனால் அவள் மீண்டும் பழையவளாகத் தன்னை மாற்றிக்கொள்ள அவள் விரும்புமளவு என்ன  மாற்றம் நடந்தது?


கணவனும் அதேமாதிரி நடக்கிறான் என்று தெரிய வந்தது கூடுதல் துன்பம்தானே தவிர ஆறுதலான மாற்றம் அல்லவே!

அதுதான் காரணம் என்றால் அவனுடைய தவறு தெரியாமல் இருந்திருந்தால் அவள்  தொடர்ந்து தவறு செய்துகொண்டிருந்திருப்பாள்தானே?..

ஆக அவன் இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்கிறான் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே  தவறு என்று சொல்லப்படும் அவளின் நியாயத்தைச்   செய்யத் துவங்கி விட்டாள்.

உண்மையில் கூடா ஒழுக்கத்தை முதலில் துவங்கியவள் அவளே!

அதனால் ஆணின் தவறுக்குப் பதிலடியாக பெண் நடந்துகொண்டாள் என்று சொல்வதைவிட இந்தப் படத்தில் ஆணுக்கு முன்மாதிரியாகப் பெண் நடந்துகொண்டிருகிறாள்!

அதைவிட ஆணைவிடப் பெண் ஒழுக்கக் கேட்டில் முன்னேறி விட்டாள் என்று படைப்பாளி சொல்கிறார் என்றே சொல்லலாம்.

ஆக தவறுகளில் ஆணுக்குப் பெண் இணையானவள் என்பதுபோய் ஆணுக்கு முன்மாதிரியாக நடப்பதுதான் முன்னேற்றமா?

இந்தப் படத்தின்மூலம் என்ன சொல்ல நினைக்கிறார்?

குடும்பவாழ்வில் திருப்தி இல்லையென்றால் கணவனோ மனைவியோ விருப்பம்போல் தனியாக ஒரு வாழ்க்கை வாழலாம் என்கிறாரா?

அது சரி என்றால் அவள் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதாக ஏன் சொல்கிறார்?

இந்த மாதிரி திசை மாறும் வாழ்க்கை சரியல்ல என்று சொல்ல நினைக்கிறாரா?

அப்படி நினைத்திருந்தால் ஆண் பெண் இருவரின் நடத்தைக்கு எதிராக ஏதேனும் ஒரு முறையில் ஏதேனும் சொல்லியிருக்க வேண்டுமே!

ஆதாவது நல்ல குடும்ப வாழ்வைச் சீர்குலைக்கும் சமூகச் சூழலுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் , எந்தத் திசையில் மாற்றம் வேண்டும் தீர்வு வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டுமே!

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறையின் நியாயத்தையோ அவசியத்தையோ சில வார்த்தைகளாவது சொல்லியிருக்க வேண்டுமே!

அப்படியும் இல்லையே!

ஆக என்னதான் நினைக்கிறார்!

ஆணோ பெண்ணோ சமூக நிர்பந்தத்தால் குடும்பமாக வாழ்ந்தாலும் திருப்திப்படும் விதமாக யாருடனும் எப்படியும் வாழலாம் என்கின்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறாரா?

இந்தக் கருத்து சமீப காலமாக வலுப்பெற்று வருவதாகவே நினைக்கிறேன்.

ஆதாவது ஆணுக்குப் பெண் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைப்போல இப்போது பெண் அவ்வளவு மலிவானவளாக இல்லை!

விரும்பக்கூடிய திருமண உறவு அவ்வளவு எளிதாகவோ நம்பத்தகுந்ததாகவோ இல்லை.

ஆண்கள் தன்னுடன் வாழப் பெண்ணே கிடைக்காத நிலையிலும் பெண் கிடைப்பது அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் தனது கனவுலகின் துணைவனாகத திருப்திப் படும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கப் பெண்ணுக்கு  வரம்பின்றிக் காலதாமதம் ஆகும் நிலையிலும் இருவருக்கும் பொதுவான ஒரு பொதுப் பிரச்சினை தலை தூக்குகிறது!

ஆதாவது காலா காலத்தில் திருமணம் ஆகாத நிலையில் தங்களின் பாலுணர்வை அதற்கு எதிராக நீண்டகாலம் கட்டுப்படுத்தி வாழ அவசியம் ஏற்பட்டுள்ளது!

அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் குறைந்த நிலையில் முறையற்ற கள்ள உறவை நியாயப் படுத்தும் அளவு வளர்சியடைந்துள்ளதாகவே நினைக்கிறேன்.

எய்ட்ஸ் பூதம் உலகில் பெரிதாக அச்சுறுத்துவதால் விலைமாதர் உறவும் விரும்பத் தக்கதாக இல்லை.

திருமணம் ஆகாத மற்றும் ஆன, பாலுணர்வுத் தேவையுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் உணர்வுப் போராட்டத்துக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்கிற சமூக அவசியம் முன்னுக்கு  வந்ததன் விளைவே   இந்த மாதிரி சிந்தனையோட்டம் என்று நினைக்கிறேன். 

ஒருக்கால் எண்ணற்றவர்களின் விருப்பமாக இருந்து வெளிப்படுத்தத் துணிவின்றி இருந்து இப்போதுதான்  மடை திறக்கப்பட்டிருந்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கப் போகிறது!

ஆதாவது கட்டுப்பாடற்ற உறவுகள் அங்கீகரிக்கப்படும்போது குடும்ப உறவுகள் சிதைந்துபோவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

குடும்ப உறவுகள் சிதைந்து போவது வரலாற்றுத் தேவை என்றால் அதற்கு மாற்றாக அதற்கும் மேலான அதே சமயம் இருபாலருடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாத புதுப் பண்பாடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கான ஒரு முன்மொழிவை ஒரு படைப்பாளி செய்வது பாராட்டத் தக்கது!

அப்படியிலாமல் வெறும் பாலுணர்வை மட்டும் அளவுகோலாக வைத்துக் குடும்ப உறவுகளைச் சீர்குலைத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.

பெண் மீண்டும் அடிமை ஆவாள்!

 இன்று சொத்துரிமை என்பது வாழ்வில் முக்கியப் பங்கு வகிகிறது.

ஆண்கள் தங்களின் குழந்தைகளைக்கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஆபத்து உருவானால் பெண்களின் நிலை என்ன ஆகும்?

ஆண்கள் தங்களின் பிள்ளைகளைக்கூட தங்களுடையது அல்ல என்று அபாண்டமாகச் சொல்லி ஓடி விடலாம்.

பெண்களால் முடியுமா?

பிள்ளைகளின் வளர்ப்பு,  கல்வி,  எதிர்காலம் என்ன ஆகும்?

 யாரைச் சார்ந்து  பெண்  வாழ்கிறாளோ அந்த ஆணுக்கு அடிமையாவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்!

இதுதான் பண்பாட்டு வளர்ச்சியா?

ஆணுக்குப் பெண் இணையானவள் என்பதே சமூக நீதி! அதைத்தான் பாரதி தனது பாடல்கள் மூலம் முரசறைந்து முழங்கினார்!

அதை,  தான் வலியுறுத்தும் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு ஆதரவாகப் பயன் படுத்தியது கேவலமான இழிவாகும்!

மனைவியை பாலுறவுக்கு மட்டுமே கணவன் நாடினான் என்பதை இவ்வளவு பச்சையாக அருவெறுப்பாக, ஆபாசமாகத்தான் காட்ட வேண்டுமா?  ஒரு கலைஞனால் வேறுவகையில் நயமாகச் சொல்ல முடியாதா?

ஆக இளம் வயதுப் பிள்ளைகளுக்கெல்லாம் பாலியல் வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது தவிர அந்த ஆபாசத்தால் எதை உணர்த்துகிறார்?

ஆதாவது அவள் தனது பாதையிலிருந்து திரும்பியிருக்கலாம்.

இந்தப் படத்தைப் போன்ற வக்கிரங்களால் அந்தப் பாதையில் நடக்கத் துணியும் எத்தனை பேர் அப்படித் திரும்புவார்கள்?

பண்பாடு என்பது நினைத்தால் அடித்துவிட்டு எழுதப்படும் கிறுக்கெழுத்து அல்ல!

மொத்தத்தில் சொல்லப்போனால் ஆணாதிக்க மனப்பான்மைக்கு வலு சேர்க்கும் விதத்தில் பெண்ணுரிமை அல்லது பெண் சமத்துவம் என்கின்ற பெயரால் முன்வைக்கப்பட்ட பண்பாட்டுச் சீரழிவுச் சித்திரமே இது!

உண்மையில் இது பெண்ணை அடிமையாக்கும்!

முடிந்தால் காரித்துப்பலாம்! 
Sunday, November 5, 2017

எனது மொழி ( 229 )

என் கூடாது?..தீண்டாமைக்கு எதிராக எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும் சட்டங்கள் இயற்றினாலும் இன்னும் யாரும் பொருட்படுத்தாத ஒரு அவமானகரமான கொடுமை தடையின்றி நடந்துதான் வருகிறது!

தாழ்த்தப்பட்ட மக்களில் வயதானவர்களைக்கூட ட்ரவுசர் ஒழுங்காகப் போடத் தெரியாத சிறுவர் உட்பட வயதில் சிறியவர்கள் நீ நான் என்று பேசுவதும் அவன் இவன் என்று பேசுவதும்...

அதையும் தடை செய்து தண்டனைக் குரிய குற்றமாக அறிவித்தால் தீண்டாமைக் கொடுமையின் விஷவேர் வேகமாக அறுபடுமே!

மரியாதைக் குறைவை எதிர்த்து ஏன் ஒரு சட்டம் கொண்டுவரக் கூடாது?

Sunday, October 29, 2017

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (45)


சரியா தவறா?

கடவுள் நம்பிக்கை சரியா தவறா என்பதை நமக்கு வரும் இன்ப துன்பங்களைவைத்து முடிவு செய்தால் பெரும்பாலோர் நாத்திகர்களாகவே இருக்கவேண்டும். உண்மை அப்படி இல்லை! பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர். இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் இருக்கவேண்டும். அதற்கு அறிவுபூவமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்றால் அது எந்த நிலையிலும் இருக்கக் கூடாது! அதற்கும் அறிவுபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுதான் தெளிந்த அறிவு! அதனால் தமக்கோ தாம் வாழும் சமூகத்துக்கோ அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமிக்கோ எந்தத் தீங்கும் இருக்க முடியாது! கடவுள் நம்பிக்கையும் மறுப்பும் இருப்பு பற்றிய இருவேறு கண்ணோட்டங்களே! அதில் படைப்பு என்பது ஒரு கண்ணோட்டம். அது ஆத்திகம்! இயக்கம் என்பது ஒரு கண்ணோட்டம் . அது நாத்திகம்! இரண்டும் வலியுறுத்துபவை உயர்ந்த வாழ்க்கைப் பண்புகளே! மூட நம்பிக்கைகளைக் கலந்தால் இரண்டும் பயன் படாது! சரியாகப் புரிந்துகொண்டால் முரண்பாடுகளுக்கோ மோதலுக்கோ இடமில்லை! அவ்வளவே!

Wednesday, October 25, 2017

எனது மொழி ( 228)

நெஞ்சு பொறுக்குதிலையே!

நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் மனித மனம் படைத்த அத்தனை பேர் உள்ளத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து விட்டது என்பதில் ஐயமில்லை!

இதுவும் ஒரு சில நாட்களில் மறக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.

அதற்குத் தேவை இன்னொரு பரபரப்பான செய்தி மட்டுமே!

இந்தக் கொடுமை நடந்ததற்கு யாரை முழுப் பொறுப்பாக்க முடியும்?

பல முறை புகார் கொடுத்தும் கவனிக்காத மாவட்ட ஆட்சியரையும் காவல் துறையையுமா?

அது சரி என்றால் இப்படி ஒரு சம்பவம் நடக்காவிட்டாலும் இதைவிட கந்துவட்டிக் கொடுமை அதிகம் நடக்கும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பணியில் இருக்கும் அத்தனை பேரையும் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

காரணம் இப்படி  ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதற்காக அவர்கள் அனைவரையும் நல்லவர்களாக நினைக்க முடியாது!அங்கெல்லாம் இத்தகைய கொடுமைகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.

அது சரியா? நடக்குமா?

அவர்களின் பணியாக எது நாடு முழுவதும் நடக்கிறதோ அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

கடன் கொடுத்த கந்துவட்டிக்காரரை முழுப்பொறுப்பாக்கலாமா?

அப்படிச் செய்தாலும் பெரும்பாலான கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

காரணம் இந்த சம்பவத்துக்கு எது காரணமாகச் சொல்லப்படுகிறதோ அதைவிட அதிகமான கொடூரமனம் படைத்த கந்துவட்டிப் பேர்வழிகள் நாடுமுழுக்க இருக்கிறார்கள்.

அதே சமயம் வருவாய்க்கு வேறு வழி இல்லாமல் இருக்கும் கொஞ்சக் காசை வைத்து இதை  ஒரு தொழிலாகச் செய்து பிழைப்பவர்களும் இருக்கிறாகள். அதில் பணத்தைத் தொலைத்து ஓட்டாண்டி ஆனவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் வருவாய்க்காக கந்துவட்டித் தொழில் செய்யும் அனைவரும் கொடூர மனம் படைத்தவர்கள் அல்ல!

இதில் இரக்கமற்ற கெட்டவர்களை மட்டும் பிரித்து நடவடிக்கை எடுக்கவும் முடியாது!

ஆனால் கந்து வட்டித் தொழில் செய்யும் ஒவ்வொருவராலும் மக்கள் கொள்ளை அடிக்கப் படுகிறார்கள்  என்பதில் ஐயமில்லை!

தனது குடும்பத்தையே தீக்கு இரையாக்க முடிவெடுத்த இசக்கிமுத்துவையும் அவருடைய மனைவியையும் பொறுப்பாக்க முடியுமா?

அதுவும் முடியாது! தனது மனைவியும் இந்த முடிவுக்கு இணங்கும்அளவு பாசத்துடன் வாழ்ந்த அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாகலாம்  என்கிற முடிவுக்கு வர மாட்டார்கள்!

தாங்கள் மானத்துடன் வாழ எந்த வழியும் புலப்படாத நிலையில் மாற்று வழி தெரியாத நிலையில் வாழ்வதைவிட சாவது மேல் என்கிற நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைத் தீயில் சுட்டுப் பொசுக்க பெற்ற தாய்க்கு எப்படித்தான் மனம் வந்தது?

தாங்கள்  இருக்கும்போதே வாழ வழியில்லாமல் போன அந்தக் குழந்தைகள் தாங்கள் மடிந்தபின்னால் இதுபோலத் துன்பப்படுவதை அந்தத் தாயால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வளர்ப்பும் வாழ்வும் அழிக்கக்கூடிய தகுதியில் நாட்டு நிலை இல்லை!

அப்படியானால் இந்தக் கொடுமையைத் தவிர்த்திருக்க வாய்ப்பே இல்லையா?

இருக்கிறது . செய்யத்தான் யாரும் இல்லை!

ஆதாவது சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் தடைசெய்து மீறுபவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதே சமயம் வங்கிகள் அனைத்து மக்களுக்கு கடனுதவி செய்ய முடியாத நிலையில் நியாயமாகக் கடன்கொடுத்து வாங்க உதவிகரமான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

கொடுப்பவரின் பணத்துக்கு நியாயமான வட்டியுடன் வாங்கியவர் பணம் திருப்பிக் கொடுக்க வாங்கியவருக்கு சொத்து இருக்கும்வரை  சட்டம் வகை செய்ய வேண்டும்.

சொத்து வசதி இல்லாத முறையான அங்கீகரிக்கப்பட்ட வருவாய் இல்லாத யாருக்கும் கொடுக்கும் கடனுக்கு வாங்கியவரின் நணையமும் யோக்கியதாம்சமுமே பொறுப்பாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் எழுதிவாங்கும் பத்திரங்களுக்கோ செக் போன்றவற்றுக்கோ சட்டம் மரியாதை கொடுக்கக் கூடாது.

சொத்து இருப்பவர்களிடம்கூட  தேதியும் துகையும் எழுதாத வெற்றுப்  பத்திரத்தில்  கையெழுத்து வாங்குவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும். 

ஒவ்வொரு அஞ்சல் நிலையத்திலும் வரிசை எண்ணும் தேதியும் இலவசமாக முத்திரை வைக்கப்பட்ட தனியார் பத்திரங்களும் ஒப்பந்தங்களும் மட்டுமே செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும்.

அதுபோலவே வெற்றுக் காசோலை பெறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அது வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவதையும் தேதியை விருப்பம்போல் எழுதிக் கொள்வதையும் தடுக்கும்.

அதே சமையம் கடன் கொடுத்தவர்களின் பணத்துக்கு அவர்களுக்கு இழப்பு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவமதிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கக் கூடாது.

அவர்களின் இயலாமைக்கு அனுதாபப் பட்டு உதவ சக்தியுள்ளவர் முன்வர வேண்டும்.

காவல்துறையும் அரசு இயந்திரமும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்.

கடனுக்காக சொத்துக்களை இழந்தவர்களைக் கேவலமாகப் பார்ப்பதோ அவர்களே அப்படி நினைப்பதோ கூடாது. அதனால் விபரீத முடிவுக்கு அவசியம் இருக்காது!.

அனைத்தையும் இழந்தாலும் உழைத்துப் பிழைத்து முன்னேறவேண்டும் என்கிற நியாயமான பிடிவாதத்துடன் வாழ்வைத் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.

(இதே இசக்கிமுத்து குடும்பம்கூட அனைத்தையும் உதறிவிட்டு வெளியேறி எத்தனையோ நல்ல மனிதர்களில் ஒருவருடைய பண்ணைகளில் பணிபுரிந்து தாமும் வாழ்ந்து குழந்தைகளையும் வாழவைத்திருக்கலாம்)

இப்படிப்பட்ட நியாய உணர்வுடன் கூடிய சட்ட திட்டங்களும் நாணையத்தை உயிரென மதிக்கும் பண்பாடும் ஊழலற்ற அதிகார வர்க்கமும் உருவாக்கப்பட்டால் இத்தகைய அவலங்கள் இருக்காது!

நடக்குமா?
Saturday, May 27, 2017

விவசாயம் ( 92 )

முழு மூடர்கள்!

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு சொல்கிறது.

இதன்படி ஒரு விவசாயி தன்னிடம் மாடு வாங்கும் ஒருவன் அதை என்ன செய்யப்போகிறான் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

பயனற்ற மாடுகளையும் கன்றுகளையும் யாருக்கும் விற்கமுடியாமல் தெருவில் விரட்டவேண்டும்.

அல்லது தனது இதர சொத்துக்களை விற்று தீனி வாங்கி வெறும் மாடுகளுக்குப் போடவேண்டும்.

அல்லது அவற்றைப் பட்டினிபோட்டுக் கொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் இன்றைய விவசாயப் பொருளாதாரம் அனுமதிக்கிறதா?

மாட்டுக்கறி வாங்கித் தின்பவன் அதற்குப் பதிலாக ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் மீனுக்குமாக . மாறவேண்டும்.

அவற்றுக்கு இப்போதுள்ள விலையைப்போல் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும். அல்லது தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மாட்டுத் தோலால் செய்யப்படும் பொருட்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கவேண்டும்.

இத்துவெல்லாம் நடைமுறை சாத்தியமா?

மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்பது உலகமக்கள் அனைவரின் உரிமை!

அதைத் தடுப்பதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?

இன்று மாட்டு மாமிசம் உண்பதும் உண்ணாததும் அவரவர் பழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர அது பாவ புண்ணியம் சார்ந்த விஷயம் அல்ல!.இன்று யாரெல்லாம் மாட்டு மாமிசத் தடையை ஆதரிகிறார்கள் என்று பார்ப்போம்.

மாட்டு மாமிசம் உண்டு பழக்கம் இல்லாதவர்கள்....

மாடுவைத்து விவசாயமோ பால்பண்ணையோ வியாபாரமோகூடச் செய்யாதவர்கள்.....

பயனற்ற மாடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவிக்கத் தேவை இல்லாதவர்கள்......

எந்த ஒரு மாட்டுக்கோ அல்லது கன்றுக்கோகூட ஒரு புல்கூடப்பிடுங்த்கிப் போடத்  தெரியாதவர்கள்.....

மாட்டைக் கடவுளாக வழிபட்டுக்கொண்டே அந்த மாட்டுத்தோலால் ஆன அத்தனை பொருட்களையும் பயன்படுத்துபவர்கள்.

இதுநாள்வரை பயனற்ற ஒரு மாட்டைக்கூட இரக்கப்பட்டு வாங்கிவைத்துப் பராமரிகாமல் தங்களிடம் இருந்ததையும் வெட்டுக்காரனுக்கு விற்ற பாவிகள்!

இவர்கள் மாடுகளின்மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்தால் பயனற்ற மாடுகளை வாங்கித் தங்கள் பொறுப்பில் வைத்துப் பராமரித்து இறந்தபின்னால் நல்லடக்கம் செய்யட்டும்!

மாடுகள் மட்டுமல்ல அனைத்துவகை மாமிசம் உண்பதையும் தடை செய்யட்டும்! அவற்றை மட்டும் கடவுள் படைக்காமல் கழுதையா படைத்தது?

இந்த முட்டாள்களுக்குச்  சில கேள்விகள்!

இவர்கள் எல்லோருமே விவசாயத்துக்கோ அல்லது பால்பண்ணைக்கோ சம்பந்தம் இல்லாதவர்களா?

அதில் பயனற்றுப்போன மாடுகளை இத்தனைநாள் என்ன செய்தார்கள்? இனி என்ன செய்யப்போகிறார்கள்?

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாடுகள் மாமிசத்துக்காக வெட்டும் நிலையில்தான் இப்போதைய தீவனத் தேவை பராமரிக்கப்படுகிறது.
 இந்த நிலையில் மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டால் பயனற்ற அவற்றையெல்லாம் பராமரிப்பதற்கான தீவனம் எங்கிருந்து வரும்? அதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா?

சந்தையில் இருந்து மாடு வாங்கிவரும் ஒரு விவசாயி அது வேலைக்கோ பாலுக்கோ ஆகாது என்கிற நிலையில் அதை வைத்து என்ன செய்வான்? முன்பு அதனிடம் வேலை வாங்கியவர்களும் பால்கறந்தவர்களும் வேறாக இருக்க கடைசி விவசாயிக்கு அதை சும்மா வைத்துச் செலவு செய்யும் தண்டனையா?

விபத்தில் முடமாகிப்போகும் மாடுகளை வைத்து வாழ்விக்க நவீன மருத்துவ மனைகள் உள்ளிட்ட ஓய்வில்லங்கள் அமைப்பீர்களா?

மாடுகளில் சுண்டப் பால்கறப்பதால் எண்ணற்ற கன்றுகள் சாவதைத் தடுக்க பால்குடிப்பதைத்  தடை செய்வீர்களா?

அல்லது பால் குடிப்பது பாவம் என்று சொல்லிச் சாக்கடை நீரைக் குடிப்பீர்களா?

மாட்டு மாமிசம் உண்பவர் எல்லாம் கெட்டவர் உண்ணாதவர் எல்லாம் யோக்கியர் என்று சொல்வீர்களா?

எந்த ஒரு உயிரினத்தையும் அவை வாழும்வரை தேவையில்லாமல் கொல்வதும் துன்புறுத்துவதும் மட்டுமே தடுக்கப்படமுடியும் . அவற்றைத் தவிர்க்கமுடியாமல் கொல்வதை நிறுத்த முடியாது, காரணம் மனித வாழ்க்கை சிலபல உயிரினங்களின் அழிவைச் சார்ந்தும் உள்ளது என்பதை உணர்வீர்களா?....

இதற்கெல்லாம் இந்த அடிமூடர்கள் பதில் சொல்லட்டும்!

இல்லாவிட்டால் கேவலமான அரசியலுக்காக இத்தகைய அக்கிரமத்தைச் செய்கிறோம் என்று ஒப்புக்கொள்ளட்டும்!

நேர்மையுள்ள மனிதர்களானால் போகாத ஊருக்கு வழி சொல்லாமல் பயனற்ற  கால்நடைகள் அனைத்தையும் தங்கள் சொந்தப் பொறுப்பில் எடுத்து வளர்க்கட்டும்!


Thursday, May 25, 2017

நாட்டுமாடும் கலப்பினமாடும் - விவசாயம் ( 91 )

நமது நாட்டு மாடு இனங்கள் மிகவும் குறைந்துபோய் அந்த இடத்தைக் கலப்பின மாடுகள் பிடித்துக்கொண்ட நிலையில் இப்போது மீண்டும் நாட்டு மாடுகள் பற்றி விழிப்புணர்வு பெருகி வருவது நல்ல மாற்றமாகும்.


ஆனால் இனங்களின் வேறுபாட்டைச் சொல்லி நமது நாட்டு மாட்டு ரகங்களின் பெருமையைப் புகழ்வதும் கலப்பின மாடுகளை இகழ்வதும் நடக்குமளவு அது பற்றிய அடிப்படைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெருமைப்படுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. முதலில் நாட்டுமாடுகளின் உழைப்பின் பாத்திரம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இரண்டாவதாக மக்களின் பால் தேவைக்குப் போதுமான நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் அல்லது மாற்றத்தினால் ஏற்படக்கூடிய உத்தேச எண்ணிக்கை உயர்வும் போதுமானதா என்பதற்கு நம்பத்தகுந்த மாற்றுத் திட்டம் இல்லை. மூன்றாவதாக நாட்டுமாடுகளுக்கே உரித்தான மேய்ச்சல் நிலம், தீனி பராமரிப்பு முறைகள், உழைப்பு போன்றவை பற்றி யாரும் நினைப்பதில்லை. இந்த அடிப்படையில் நான் இங்கு எழுப்பும் ஒரு கேள்விக்குத் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். ஆதாவது கலப்பின மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனங்களை மட்டும் நாட்டு மாடுகளுக்குக் கொடுத்து அதே முறையில் வேலைகளில் ஈடுபடுத்தாமல் கொட்டகையிலேயே பராமரித்து வந்தால் கிடைக்கும் சாணமும் மூத்திரமும் ..... நாட்டுமாடுகளை முன்பு வளர்த்ததுபோலவே கலப்பின மாடுகளையும் மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு, வேதிப்பொருள் தொடர்பு இல்லாத பசும்புல், உலர் தீவனம், தவிடு புண்ணாக்கு ஆகியவை மட்டும்கொடுத்து வேலைகளிலும் ஈடுபடுத்தினால் அவற்றிடம் இருந்து கிடைக்கும் சாணமும் மூத்திரமும்.... இதில் எது உயர்ந்த தரத்துடன் இருக்கும்?

Wednesday, May 24, 2017

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (44 )

ஆன்மிகவாதி!

தான் வேறு இறைவன் வேறு  அல்ல,

தான் இறைவனின் ஒரு அங்கமே.

தான்மட்டுமல்ல அனைத்து மக்களும்  அனைத்து உயிர்களும் இறைவனின் அங்கமே .

அணுவிலிருந்து அண்டம்முடிய  அனைத்துப் பொருட்களாகவும் சக்தியாகவும்  இயக்கமாகவும் விளங்குபவன் இறைவனே .

இதில் மனிதராய்ப் பிறந்த நாம் சக மக்களுக்கும் சக உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சிந்திப்பதும் கற்றுக்கொள்வதும் பின்பற்றுவதுமே உண்மையான ஆன்மிகம்..

 யார் இதை  உண்மையாகவே உணர்ந்து வாழ்கிறாரோ  அவரே உண்மையான ஆன்மிகவாதி.

மற்ற அனைவரும் பல்வேறு படித்தரத்தில் தங்களை ஆன்மிகவாதிகளாக நினைத்துக்கொண்டும் தங்களின் அறியாமையைப் பரப்பிகொண்டும் இருக்கும் அறியாதவர்களே!மாபெரும் பொய்! - விவசாயம் ( 90 )

மண்புழு பதினைந்தடி ஆழத்திலிருந்து சத்துக்களை மேலே கொண்டுவந்து பயிருக்குக் கொடுக்கும் என்று சொல்வது உண்மையா?

அப்பட்டமான பொய்!

இயற்கை விதிகளுக்கும் இயற்கைக் கட்டமைப்புக்கும் எதிரானது.

ஆதாவது மண்புழு அவ்வளவு ஆழத்தில் வாழமுடியாது என்பதே உண்மை!

ஆனால் இயற்கை வேளாண்மையின் எதிரிகள் இது போன்ற பல பொய்களைத் திட்டமிட்டே இயற்கை வேளாண்மையின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதற்குக் காரணம் இருக்கிறது!

இயற்கை வேளாண்மையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கெடுக்க வழி இல்லை.

காரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கிறது. வளர்ந்து வருகிறது.

அதே சமயம் இயற்கை வேளாண்மை சம்பந்தமான ஆழமான புரிதல் இல்லை.

அவரவர் நினைத்ததெல்லாம் இயற்கை வேளாண்மை என்று இப்போது இருக்கிறது.

இந்தநிலையில் இயற்கை வேளாண்மையில் சாத்தியமில்லாததையும் நடக்காததையும் சொன்னால் அதைப் பின்பற்றும் விவசாயிகள் நட்டப்படுவார்கள்.

அப்போது இயற்கை விவசாயம் நமக்கு ஒத்துவராது என்று பழைய ரசாயன விவசாயத்தில் மீண்டும் விழுந்து கிடப்பார்கள்.

இதுதான் எதிரிகளின் திட்டம்.Monday, May 22, 2017

எனது மொழி ( 227 )

முடியுமா? முடியாதா?

ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு அங்கமாக இருந்துகொண்டே.....

தமிழ்நாட்டை இந்திய அரசியல் நாகரிகத்துக்கு நேர் மாறாக உயர்ந்த அரசியல் நடக்கும் மாநிலமாக ஆக்கமுடியாதா?

தொழில் விவசாயம் இரண்டையும் மிக உயர்தரத்துக்கு மாற்ற முடியாதா?

அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவற்றுக்கு அரசே பொறுப்பேற்று உத்திரவாதம் வழங்க முடியாதா?

பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை விஞ்ச முடியாதா?

சாதி மதபேதங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்ட முடியாதா?

அனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதா?

இப்போது தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வரும் சக்திகளை ஒழித்துக்கட்ட முடியாதா?

சுருக்கமாகச் சொன்னால் நாம் விரும்பும் ஒரு கனவுலகமாக மாற்ற முடியாதா?

முடியும் என்றே நினைக்கிறேன்....
Sunday, May 21, 2017

எனது மொழி ( 226 )

சரிதானா?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று பலரும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். 

அது சரியானதுதானா? 

தாங்கள் விரும்பும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்களுக்கு உள்ள உரிமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.

அதைத் தடுக்க முடியாது.

காரணம் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் வசதிகளும் அவர்கள் விரும்பும்படி இல்லை.

அதற்கான பழியை ஆசிரியர்களின்மேல் போடுவது சரியாகாது.

ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களுக்கான கடமைகளை வகுப்பதும் அரசுகளும் அதன் கல்வித் துறைகளுமே!

அவர்கள் சோரம்போய் அரசுப் பள்ளிகளை நாசம் செய்ததற்கு ஆசிரியர்கள் மட்டும் எப்படிப் பொறுப்பு?

அவர்கள்தான் பொறுப்பு என்றால் அவர்கள்மேல் ஈவிரக்கமில்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கட்டும்!

அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் வசதிகளையும் தனியார் பள்ளிகளைவிட அதிகமாக்கட்டும்!

அதுதான் நியாயம்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மதிக்கத் தக்கவர்களாக இல்லை! ஆனால் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
Sunday, May 14, 2017

எனது மொழி ( 225 )

மொழி பற்றிய கண்ணோட்டம் தாய் மொழி அனைத்துச் சிறப்புகளையும் கொண்டிருக்கவேண்டும், தேவைக்குத் தக்கபடி மற்ற மொழிப் பயன்பாடு இருக்கவேண்டும். என்பதே மொழிகள் பற்றிய பாரபட்சமற்ற அடிப்படைக் கண்ணோட்டம் ஆகும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இந்தக் கண்ணோட்டம் மொழியை வைத்துப் பிழைத்தவர்களுக்கும் இல்லை! அனைத்து மொழிகள் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு மொழியை அல்லது இரு மொழியை பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்று முனைப்பாக இருப்பவர்களுக்கும் இல்லை. இதனால் இந்திய மொழிகள் அழிவுத் திசையில் பாய்ந்துகொண்டு இருக்கிறது! இதனால் மக்கள் மனதில் அறிவுத்திறன் நிறைந்திருக்கவேண்டிய இடத்தில் குப்பைகள் நிறைந்திருக்கிறது!... நாடு எப்படி முன்னேறும்?

Friday, April 28, 2017

உணவே மருந்து (100)

 கள்ளும் பதநீரும்.... 

நாம் எத்தனையோ உணவு வகைகளை திட வடிவிலும் திரவ வடிவிலும் உண்கிறோம்.

அதில் பல உயிர்வாழ்வதற்கான அவசிய அடிப்படைகளாகவும் வேறு பல அவற்றின் நற்பயனுக்காக அல்லாமல் சுவைக்காகவும்  விரும்பி உண்ணப்படுகின்றன.

இன்னும் சில அடிப்படைத் தேவையும் இல்லாமல் சுவையும் இல்லாமல் உண்ணப்படுகின்றன.

அதற்குக் காரணங்கள் இரண்டு.

முதலாவது மருத்துவப் பயன்.

இரண்டாவது போதை.ஆதாவது மனதை மயக்கி நடைமுறை வாழ்விலுள்ள பிரச்சினைகளில் இருந்து  நம்மை விலக்கி வைத்து அதை இன்பமான அனுபவமாக உணரவைத்துத் தார்க்காலிக விடுதலையையும் நிரந்தரத் துன்பத்தையும் அளிப்பது.

இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் கள் ஆகும்.

கள் என்பது பெரும்பகுதி பனைமரம் தென்னைமரம் ஆகியவற்றிலிருந்தே இறக்கப் படுகிறது.

துவக்கத்தில் கள்ளாக இறங்குவது அதன்பின் பதநீராகவும் கருப்பட்டியாகவும் கற்கண்டாகவும் பல பொருட்களாக மாற்றப்படுகிறது.

அவற்றில் மிகவும் அதிகப் பயன்பாட்டில் இருப்பது கருப்பட்டி.

அதற்கு அடுத்து அனைவராலும் விரும்பப்படுவது சுத்தமான பதநீர்.

மதுப் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுவது கள் ஆகும்.

தென்னை பனை மரப் பாளைகளில் இருந்து சீவி அப்படியே எடுத்தால் அது கள்  ஆகும் .

கள் இறக்கும் முட்டிப்பானையில் சுண்ணாம்பு தடவி இறக்கினால் அது பதநீர்.

ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

சுண்ணாம்பு தடவப்பட்டால் அது இனிப்பு மற்றும் காரச்  சுவையுள்ள பதநீராக மாற்றம் பெறுகிறது. அருந்தினால் சுவையான பானமாக உணரப்படுகிறது.

குழந்தைமுதல் பெரியவர்வரை யார்வேண்டுமானாலும் யார் முன்னிலையிலும் அருந்தலாம். மதிப்பு மிக்க செயலாகப் பார்க்கப்படும்.

அதைக் காய்ச்சினால் கருப்பட்டியும் கிடைக்கிறது.

ஆனால் சுண்ணாம்பு தடவாமல் இறக்கப்படும் கள் புளிப்புச் சுவையுள்ள மதுவாக  ஆகிறது.

அதை அனைவரும் விரும்புவது இல்லை.

அனைவர் முன்னிலையிலும் மரியாதையுடன் அருந்த முடியாது.

ஒழுக்கக் கேட்டின் ஒரு அங்கமாகவும் நிறையப்பேர் நினைப்பதுண்டு.

ஆனால் இன்னொரு சாரார் இருக்கிறார்கள்.

ஆதாவது கள் தென்னை பனை மரங்களில் இருந்து இயற்கையாகக்  கிடைக்கும் பானம் ஆனதால் உடலுக்கு நல்லது மருத்துவ குணம் நிரம்பியது என்றெல்லாம் அதன் சிறப்பைச் சொல்லி கள் இறக்கவும் குடிக்கவும் அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை கள்ளும் பதநீரும் ஒன்றே.

காரணம் இரண்டும் இயற்கையாகக் கிடைக்கின்றன. சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன என்பதே.

கள்ளைப் பதநீரைவிட ஒரு பங்கு உயர்வாகவும் நினைக்கிறார்கள்.

காரணம் அதில் சுண்ணாம்பு சேர்ப்பதில்லை. அதனால் இயற்கைப் பண்பு பாதிப்படையாமல் கிடைக்கிறது என்பதே.

ஆனால் உண்மை அதுவா?

கள் குடிப்பதற்கான காரணம் அதிலுள்ள சத்துக்களும் இயற்கையாகக் கிடைக்கும் பானம் என்பதும் தானா?

நிச்சயம் கிடையாது!

போதையல்லாத காரணங்கள்தான் என்பது உண்மை என்றால் போதை வராத சுவையான இயற்கை பானங்கள், மூலிகைச் சாறுகள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு என எத்தனையோ குடிக்கலாமே?

சுவையற்ற கள்ளுக்கு எதற்கு தனி மரியாதை?

தவிர, கள்ளை இயற்கை உணவு  என்று சொல்ல முடியாது.

காரணம் அது இயற்கையில் கிடைத்தாலும் சுவை கிடையாது.

சுவையற்ற எதுவும்  நல்ல இயற்கை உணவு ஆகாது.

அதனால் கள்ளில் உள்ள  நன்மைகளைக் கணக்கில்கொண்டு  மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன் படுத்தலாம்.

மது போதைக்காகக்  குடிக்க நினைப்பதை இயற்கை பானம் என்பதால் குடிக்கலாம் என்று சொல்லி ஒருவர்  தன்னையும் ஏமாற்றிக்கொண்டு பிறரையும்  ஏமாற்றக்  கூடாது.

கள்ளுக் கடைக்கு ஓடுவதும் குடித்துவிட்டுத் தெருவில் கிடப்பதும் கள்ளில் உள்ள நல்ல பயன்களுக்காக அல்ல!

போதை ஒன்றுக்கே!

ஆனால் பதநீர் அப்படி அல்ல!

அதுவும் கள்ளைப் போலவே தென்னை பனை மரங்களிலிருந்து இறக்கப் பட்டாலும் போதை தருவது இல்லை. மது செய்யும் தீமைகளைச் செய்வதும் இல்லை.

மாறாக அத்துடன்  சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் சுவையான பானமாக மாற்றம் அடைகிறது.

சுண்ணாம்பு என்பது உடல்நலத்துக்கு எதிரானது அல்ல.

தவிர விரும்பி  உண்ணத் தகுதியற்ற கள்ளை சுவையான பானமாக ஆதாவது இயற்கை பானமாக மாற்றுகிறது.

அதனால் பதநீரே சிறந்த பானம் .

கள் என்பது மதுவும் சில நேரங்களில் மருத்துவப் பொருளும் மட்டுமே!

அதே சமயம் மற்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கையான மது வகைகளை உற்பத்தி செய்து விற்றுக் குடிக்கவைத்து மக்களை மாக்களாக்குவதைவிட கள் இறக்கி விற்க அனுமதிப்பது குறைந்த தீமைகளைக் கொண்டது.

பல விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயைக் கொடுக்கக் கூடியது.

அதனால் கள்ளைத்  தவிர்ப்போம். பதநீரைப் பயன்படுத்துவோம்!
Thursday, April 27, 2017

எனது மொழி (224)

தண்டனை

நல்லவர்களுக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அந்தத் தீயவருக்கு நல்லவர் தண்டனை தனியாகக் கொடுக்கவேண்டியது இல்லை!
அவரது நட்பையோ உறவையோ துண்டித்துக்கொண்டால் போதும்.
நல்லோரது இழப்பைவிடப் பெரிய தண்டனையும் இழப்பும் வேறு இல்லை!

Saturday, April 8, 2017

எனது மொழி (223)

சுதந்திரம் 
சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.
அது உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் பொருந்தவேண்டும்.
அனைவருக்கும் பொருந்தாது என்றால் பிறர் சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று பொருள்!
நியாயமற்றது என்று பொருள்!
அப்படிப்பட்ட சுதந்திரத்தை எதிர்த்துப் போராடிப் பெறுவதே உண்மையான சுதந்திரம்.

Thursday, February 23, 2017

உணவே மருந்து ( 99 )

ஆனந்த வாழ்வு  

பொதுவாகவே அனைத்து உயிரினங்களும் ஆனந்த வாழ்வு வாழவே விரும்புகின்றன.

அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல!

ஆனால் அப்படிப்பட்ட ஆனந்த வாழ்வை நடைமுறையில் வாழ்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை.

காரணங்களைப் பார்ப்போம்.

ஆனந்தம் என்பது உடல்பூர்வமானது உள்ளபூர்வமானது என இரண்டு  வகைப்படும்.

அதில் உளப்பூர்வமானது என்பது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்போது கிடைக்கும் மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஆகும்.

உடல்பூர்வமானது என்பது நான்கு  வகைப்படும்.

முதலாவது உண்ணும் உணவின் சுவையில் கிடைப்பது.

இரண்டாவது உண்ணும் உணவு கழிவுகளாக வெளியேறும்போது கிடைப்பது.

மூன்றாவது தாம்பத்திய உறவால் கிடைப்பது.

நான்காவது நோய்களில் இருந்து விடுபடும்போது கிடைப்பது.

முதலாவதான உணவின்மூலம் கிடைக்கும் சுவை என்பது நன்கு உழைத்து நன்கு பசித்து உண்ணும்போதுதான் கிடைக்கும்.

ஆனால் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் சுவைக்காகவும் அந்தந்த நேரத்தில் உண்ணும் பழக்கத்துக்காகவும் உண்கிறோம். உடலுழைக்காமல் வாழ்வதைப் பெருமையாக நினைத்துவாழ்கிறோம்.

அதனால்  உண்மையான சுவையை இழப்பது மட்டுமல்ல  பொய்யான சுவையைத்தேடி  அலைவது மட்டுமல்ல அதனால் பல நோய்களையும் தேடிக்கொள்கிறோம்.

இரண்டாவது சுவை நாம் உண்ணும் உணவு நன்கு செரித்தபின்பு தேவையற்றவை உடலுக்குச் சுமையாக இல்லாமல் விட்டால்போதும் என்று வெளியேறும்போது கிடைப்பது.

அந்தச் சுவையையாவது அனுபவிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

நாம் உண்ணும் உணவுகள் தபால்காரனைப்போல நமக்குக்கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறவேண்டும்.

அப்படி வேண்டாத கழிவுகள் வெளியேறும்போது கிடைக்கும் ஆனந்தம்
சிறப்பானது.

பல்வேறு  காரணங்களால் தாமதித்து மிகுந்த அவஸ்தைக்குப் பின்னால் கழிவுகள் வேகமாக வெளியேறும்போது அதற்கு ஈடான சுகமாக எதையும் நினைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

அப்படிப்பட்ட சுகம் ஒவ்வொரு தடவை மலஜலம் கழிக்கும்போதும் கிடைக்கிறதா?

நிச்சயம்இல்லை

காரணம் அத்தகைய சுகத்தை நாம் உண்ணும் உணவுகளும் உடலுழைப்பின்மையும் கொடுப்பதில்லை.

ஆனாலும் வேண்டாத  விருந்தாளிகளாய் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் உணவுகளையும் உழைப்பின்றி வாழ்தலையும் உயர்வாக நினைத்து வாழ்கிறோம்.

அதனால் கழிவுகள் வெளியேறும்  ஆனந்தத்தை  அனுபவிப்பதற்குப் பதிலாக மலச் சிக்கலையும் மூலநோயையும் அவற்றால் தோன்றும் இதர நோய்களையும்  வரமாகப் பெற்று அவலவாழ்வு வாழ்ந்து வருகிறோம்.

தாம்பத்திய உறவால் கிடைக்கும் மூன்றாவது சுகத்தை முழுமையாக
அடைய உடலாலும் உள்ளத்தாலும் தகுதியற்றவர்களாகப் பெரும்பாலோர் வாழ்வதால் அது ஒழுக்கக்கேட்டுக்கு இணையான ஒன்றாகிவிட்டது.

நான்காவது சுவையான நோய்களில் இருந்து குணமடையும்போது கிடைக்கும் சுவையும் இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. காரணம் இயல்பான உடல்வாழ்வையே தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டதே. அதன்காரணமாக அதிகம் பாதிக்கும் அவசர நோய்களில் இருந்து தாற்காலிக நிவாரணம் பெறுவதுதான் நோயற்ற வாழ்வு என்பதாகச் சுருங்கி விட்டது. நோய்களில் இருந்து முழுத் தகுதியுடனான உடல்வாழ்க்கைக்குத் திரும்புவது என்கிற சுவையையும் பெரும்பாலோர் சுவைப்பது இல்லை. அதனால் மருத்துவர்களுக்குக் கப்பம் கட்டும் வாழ்வாகவே பெரும்பாலோரது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான இந்தச் சுவைகளைஎல்லாம் இழந்துவிட்டு அல்லது சிக்கலாக்கிவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் சுவையற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறோம். இந்தச் சுவைகளைஎல்லாம் யார் மீட்டெடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையான ஆனந்த வாழ்வு வாழ்பவர் ஆவார்கள்! மற்றவர்கள் அத்தகைய கனவுகளுடன் அதற்கு எதிரான வாழ்வையே விதியென நினைத்து வாழவேண்டியதுதான்!