ss

Saturday, May 27, 2017

விவசாயம் ( 92 )

முழு மூடர்கள்!

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு சொல்கிறது.

இதன்படி ஒரு விவசாயி தன்னிடம் மாடு வாங்கும் ஒருவன் அதை என்ன செய்யப்போகிறான் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

பயனற்ற மாடுகளையும் கன்றுகளையும் யாருக்கும் விற்கமுடியாமல் தெருவில் விரட்டவேண்டும்.

அல்லது தனது இதர சொத்துக்களை விற்று தீனி வாங்கி வெறும் மாடுகளுக்குப் போடவேண்டும்.

அல்லது அவற்றைப் பட்டினிபோட்டுக் கொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் இன்றைய விவசாயப் பொருளாதாரம் அனுமதிக்கிறதா?

மாட்டுக்கறி வாங்கித் தின்பவன் அதற்குப் பதிலாக ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் மீனுக்குமாக . மாறவேண்டும்.

அவற்றுக்கு இப்போதுள்ள விலையைப்போல் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும். அல்லது தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மாட்டுத் தோலால் செய்யப்படும் பொருட்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கவேண்டும்.

இத்துவெல்லாம் நடைமுறை சாத்தியமா?

மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்பது உலகமக்கள் அனைவரின் உரிமை!

அதைத் தடுப்பதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?

இன்று மாட்டு மாமிசம் உண்பதும் உண்ணாததும் அவரவர் பழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர அது பாவ புண்ணியம் சார்ந்த விஷயம் அல்ல!.இன்று யாரெல்லாம் மாட்டு மாமிசத் தடையை ஆதரிகிறார்கள் என்று பார்ப்போம்.

மாட்டு மாமிசம் உண்டு பழக்கம் இல்லாதவர்கள்....

மாடுவைத்து விவசாயமோ பால்பண்ணையோ வியாபாரமோகூடச் செய்யாதவர்கள்.....

பயனற்ற மாடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவிக்கத் தேவை இல்லாதவர்கள்......

எந்த ஒரு மாட்டுக்கோ அல்லது கன்றுக்கோகூட ஒரு புல்கூடப்பிடுங்த்கிப் போடத்  தெரியாதவர்கள்.....

மாட்டைக் கடவுளாக வழிபட்டுக்கொண்டே அந்த மாட்டுத்தோலால் ஆன அத்தனை பொருட்களையும் பயன்படுத்துபவர்கள்.

இதுநாள்வரை பயனற்ற ஒரு மாட்டைக்கூட இரக்கப்பட்டு வாங்கிவைத்துப் பராமரிகாமல் தங்களிடம் இருந்ததையும் வெட்டுக்காரனுக்கு விற்ற பாவிகள்!

இவர்கள் மாடுகளின்மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்தால் பயனற்ற மாடுகளை வாங்கித் தங்கள் பொறுப்பில் வைத்துப் பராமரித்து இறந்தபின்னால் நல்லடக்கம் செய்யட்டும்!

மாடுகள் மட்டுமல்ல அனைத்துவகை மாமிசம் உண்பதையும் தடை செய்யட்டும்! அவற்றை மட்டும் கடவுள் படைக்காமல் கழுதையா படைத்தது?

இந்த முட்டாள்களுக்குச்  சில கேள்விகள்!

இவர்கள் எல்லோருமே விவசாயத்துக்கோ அல்லது பால்பண்ணைக்கோ சம்பந்தம் இல்லாதவர்களா?

அதில் பயனற்றுப்போன மாடுகளை இத்தனைநாள் என்ன செய்தார்கள்? இனி என்ன செய்யப்போகிறார்கள்?

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாடுகள் மாமிசத்துக்காக வெட்டும் நிலையில்தான் இப்போதைய தீவனத் தேவை பராமரிக்கப்படுகிறது.
 இந்த நிலையில் மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டால் பயனற்ற அவற்றையெல்லாம் பராமரிப்பதற்கான தீவனம் எங்கிருந்து வரும்? அதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா?

சந்தையில் இருந்து மாடு வாங்கிவரும் ஒரு விவசாயி அது வேலைக்கோ பாலுக்கோ ஆகாது என்கிற நிலையில் அதை வைத்து என்ன செய்வான்? முன்பு அதனிடம் வேலை வாங்கியவர்களும் பால்கறந்தவர்களும் வேறாக இருக்க கடைசி விவசாயிக்கு அதை சும்மா வைத்துச் செலவு செய்யும் தண்டனையா?

விபத்தில் முடமாகிப்போகும் மாடுகளை வைத்து வாழ்விக்க நவீன மருத்துவ மனைகள் உள்ளிட்ட ஓய்வில்லங்கள் அமைப்பீர்களா?

மாடுகளில் சுண்டப் பால்கறப்பதால் எண்ணற்ற கன்றுகள் சாவதைத் தடுக்க பால்குடிப்பதைத்  தடை செய்வீர்களா?

அல்லது பால் குடிப்பது பாவம் என்று சொல்லிச் சாக்கடை நீரைக் குடிப்பீர்களா?

மாட்டு மாமிசம் உண்பவர் எல்லாம் கெட்டவர் உண்ணாதவர் எல்லாம் யோக்கியர் என்று சொல்வீர்களா?

எந்த ஒரு உயிரினத்தையும் அவை வாழும்வரை தேவையில்லாமல் கொல்வதும் துன்புறுத்துவதும் மட்டுமே தடுக்கப்படமுடியும் . அவற்றைத் தவிர்க்கமுடியாமல் கொல்வதை நிறுத்த முடியாது, காரணம் மனித வாழ்க்கை சிலபல உயிரினங்களின் அழிவைச் சார்ந்தும் உள்ளது என்பதை உணர்வீர்களா?....

இதற்கெல்லாம் இந்த அடிமூடர்கள் பதில் சொல்லட்டும்!

இல்லாவிட்டால் கேவலமான அரசியலுக்காக இத்தகைய அக்கிரமத்தைச் செய்கிறோம் என்று ஒப்புக்கொள்ளட்டும்!

நேர்மையுள்ள மனிதர்களானால் போகாத ஊருக்கு வழி சொல்லாமல் பயனற்ற  கால்நடைகள் அனைத்தையும் தங்கள் சொந்தப் பொறுப்பில் எடுத்து வளர்க்கட்டும்!


Thursday, May 25, 2017

நாட்டுமாடும் கலப்பினமாடும் - விவசாயம் ( 91 )

நமது நாட்டு மாடு இனங்கள் மிகவும் குறைந்துபோய் அந்த இடத்தைக் கலப்பின மாடுகள் பிடித்துக்கொண்ட நிலையில் இப்போது மீண்டும் நாட்டு மாடுகள் பற்றி விழிப்புணர்வு பெருகி வருவது நல்ல மாற்றமாகும்.


ஆனால் இனங்களின் வேறுபாட்டைச் சொல்லி நமது நாட்டு மாட்டு ரகங்களின் பெருமையைப் புகழ்வதும் கலப்பின மாடுகளை இகழ்வதும் நடக்குமளவு அது பற்றிய அடிப்படைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெருமைப்படுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. முதலில் நாட்டுமாடுகளின் உழைப்பின் பாத்திரம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இரண்டாவதாக மக்களின் பால் தேவைக்குப் போதுமான நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் அல்லது மாற்றத்தினால் ஏற்படக்கூடிய உத்தேச எண்ணிக்கை உயர்வும் போதுமானதா என்பதற்கு நம்பத்தகுந்த மாற்றுத் திட்டம் இல்லை. மூன்றாவதாக நாட்டுமாடுகளுக்கே உரித்தான மேய்ச்சல் நிலம், தீனி பராமரிப்பு முறைகள், உழைப்பு போன்றவை பற்றி யாரும் நினைப்பதில்லை. இந்த அடிப்படையில் நான் இங்கு எழுப்பும் ஒரு கேள்விக்குத் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். ஆதாவது கலப்பின மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனங்களை மட்டும் நாட்டு மாடுகளுக்குக் கொடுத்து அதே முறையில் வேலைகளில் ஈடுபடுத்தாமல் கொட்டகையிலேயே பராமரித்து வந்தால் கிடைக்கும் சாணமும் மூத்திரமும் ..... நாட்டுமாடுகளை முன்பு வளர்த்ததுபோலவே கலப்பின மாடுகளையும் மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு, வேதிப்பொருள் தொடர்பு இல்லாத பசும்புல், உலர் தீவனம், தவிடு புண்ணாக்கு ஆகியவை மட்டும்கொடுத்து வேலைகளிலும் ஈடுபடுத்தினால் அவற்றிடம் இருந்து கிடைக்கும் சாணமும் மூத்திரமும்.... இதில் எது உயர்ந்த தரத்துடன் இருக்கும்?

Wednesday, May 24, 2017

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (44 )

ஆன்மிகவாதி!

தான் வேறு இறைவன் வேறு  அல்ல,

தான் இறைவனின் ஒரு அங்கமே.

தான்மட்டுமல்ல அனைத்து மக்களும்  அனைத்து உயிர்களும் இறைவனின் அங்கமே .

அணுவிலிருந்து அண்டம்முடிய  அனைத்துப் பொருட்களாகவும் சக்தியாகவும்  இயக்கமாகவும் விளங்குபவன் இறைவனே .

இதில் மனிதராய்ப் பிறந்த நாம் சக மக்களுக்கும் சக உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சிந்திப்பதும் கற்றுக்கொள்வதும் பின்பற்றுவதுமே உண்மையான ஆன்மிகம்..

 யார் இதை  உண்மையாகவே உணர்ந்து வாழ்கிறாரோ  அவரே உண்மையான ஆன்மிகவாதி.

மற்ற அனைவரும் பல்வேறு படித்தரத்தில் தங்களை ஆன்மிகவாதிகளாக நினைத்துக்கொண்டும் தங்களின் அறியாமையைப் பரப்பிகொண்டும் இருக்கும் அறியாதவர்களே!மாபெரும் பொய்! - விவசாயம் ( 90 )

மண்புழு பதினைந்தடி ஆழத்திலிருந்து சத்துக்களை மேலே கொண்டுவந்து பயிருக்குக் கொடுக்கும் என்று சொல்வது உண்மையா?

அப்பட்டமான பொய்!

இயற்கை விதிகளுக்கும் இயற்கைக் கட்டமைப்புக்கும் எதிரானது.

ஆதாவது மண்புழு அவ்வளவு ஆழத்தில் வாழமுடியாது என்பதே உண்மை!

ஆனால் இயற்கை வேளாண்மையின் எதிரிகள் இது போன்ற பல பொய்களைத் திட்டமிட்டே இயற்கை வேளாண்மையின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதற்குக் காரணம் இருக்கிறது!

இயற்கை வேளாண்மையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கெடுக்க வழி இல்லை.

காரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கிறது. வளர்ந்து வருகிறது.

அதே சமயம் இயற்கை வேளாண்மை சம்பந்தமான ஆழமான புரிதல் இல்லை.

அவரவர் நினைத்ததெல்லாம் இயற்கை வேளாண்மை என்று இப்போது இருக்கிறது.

இந்தநிலையில் இயற்கை வேளாண்மையில் சாத்தியமில்லாததையும் நடக்காததையும் சொன்னால் அதைப் பின்பற்றும் விவசாயிகள் நட்டப்படுவார்கள்.

அப்போது இயற்கை விவசாயம் நமக்கு ஒத்துவராது என்று பழைய ரசாயன விவசாயத்தில் மீண்டும் விழுந்து கிடப்பார்கள்.

இதுதான் எதிரிகளின் திட்டம்.Monday, May 22, 2017

எனது மொழி ( 227 )

முடியுமா? முடியாதா?

ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு அங்கமாக இருந்துகொண்டே.....

தமிழ்நாட்டை இந்திய அரசியல் நாகரிகத்துக்கு நேர் மாறாக உயர்ந்த அரசியல் நடக்கும் மாநிலமாக ஆக்கமுடியாதா?

தொழில் விவசாயம் இரண்டையும் மிக உயர்தரத்துக்கு மாற்ற முடியாதா?

அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவற்றுக்கு அரசே பொறுப்பேற்று உத்திரவாதம் வழங்க முடியாதா?

பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை விஞ்ச முடியாதா?

சாதி மதபேதங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்ட முடியாதா?

அனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதா?

இப்போது தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வரும் சக்திகளை ஒழித்துக்கட்ட முடியாதா?

சுருக்கமாகச் சொன்னால் நாம் விரும்பும் ஒரு கனவுலகமாக மாற்ற முடியாதா?

முடியும் என்றே நினைக்கிறேன்....
Sunday, May 21, 2017

எனது மொழி ( 226 )

சரிதானா?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று பலரும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். 

அது சரியானதுதானா? 

தாங்கள் விரும்பும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்களுக்கு உள்ள உரிமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.

அதைத் தடுக்க முடியாது.

காரணம் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் வசதிகளும் அவர்கள் விரும்பும்படி இல்லை.

அதற்கான பழியை ஆசிரியர்களின்மேல் போடுவது சரியாகாது.

ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களுக்கான கடமைகளை வகுப்பதும் அரசுகளும் அதன் கல்வித் துறைகளுமே!

அவர்கள் சோரம்போய் அரசுப் பள்ளிகளை நாசம் செய்ததற்கு ஆசிரியர்கள் மட்டும் எப்படிப் பொறுப்பு?

அவர்கள்தான் பொறுப்பு என்றால் அவர்கள்மேல் ஈவிரக்கமில்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கட்டும்!

அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் வசதிகளையும் தனியார் பள்ளிகளைவிட அதிகமாக்கட்டும்!

அதுதான் நியாயம்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மதிக்கத் தக்கவர்களாக இல்லை! ஆனால் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
Sunday, May 14, 2017

எனது மொழி ( 225 )

மொழி பற்றிய கண்ணோட்டம் தாய் மொழி அனைத்துச் சிறப்புகளையும் கொண்டிருக்கவேண்டும், தேவைக்குத் தக்கபடி மற்ற மொழிப் பயன்பாடு இருக்கவேண்டும். என்பதே மொழிகள் பற்றிய பாரபட்சமற்ற அடிப்படைக் கண்ணோட்டம் ஆகும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இந்தக் கண்ணோட்டம் மொழியை வைத்துப் பிழைத்தவர்களுக்கும் இல்லை! அனைத்து மொழிகள் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு மொழியை அல்லது இரு மொழியை பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்று முனைப்பாக இருப்பவர்களுக்கும் இல்லை. இதனால் இந்திய மொழிகள் அழிவுத் திசையில் பாய்ந்துகொண்டு இருக்கிறது! இதனால் மக்கள் மனதில் அறிவுத்திறன் நிறைந்திருக்கவேண்டிய இடத்தில் குப்பைகள் நிறைந்திருக்கிறது!... நாடு எப்படி முன்னேறும்?