ss

Sunday, October 29, 2017

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (45)


சரியா தவறா?

கடவுள் நம்பிக்கை சரியா தவறா என்பதை நமக்கு வரும் இன்ப துன்பங்களைவைத்து முடிவு செய்தால் பெரும்பாலோர் நாத்திகர்களாகவே இருக்கவேண்டும். உண்மை அப்படி இல்லை! பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர். இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் இருக்கவேண்டும். அதற்கு அறிவுபூவமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்றால் அது எந்த நிலையிலும் இருக்கக் கூடாது! அதற்கும் அறிவுபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுதான் தெளிந்த அறிவு! அதனால் தமக்கோ தாம் வாழும் சமூகத்துக்கோ அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமிக்கோ எந்தத் தீங்கும் இருக்க முடியாது! கடவுள் நம்பிக்கையும் மறுப்பும் இருப்பு பற்றிய இருவேறு கண்ணோட்டங்களே! அதில் படைப்பு என்பது ஒரு கண்ணோட்டம். அது ஆத்திகம்! இயக்கம் என்பது ஒரு கண்ணோட்டம் . அது நாத்திகம்! இரண்டும் வலியுறுத்துபவை உயர்ந்த வாழ்க்கைப் பண்புகளே! மூட நம்பிக்கைகளைக் கலந்தால் இரண்டும் பயன் படாது! சரியாகப் புரிந்துகொண்டால் முரண்பாடுகளுக்கோ மோதலுக்கோ இடமில்லை! அவ்வளவே!

Wednesday, October 25, 2017

எனது மொழி ( 228)

நெஞ்சு பொறுக்குதிலையே!

நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் மனித மனம் படைத்த அத்தனை பேர் உள்ளத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து விட்டது என்பதில் ஐயமில்லை!

இதுவும் ஒரு சில நாட்களில் மறக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.

அதற்குத் தேவை இன்னொரு பரபரப்பான செய்தி மட்டுமே!

இந்தக் கொடுமை நடந்ததற்கு யாரை முழுப் பொறுப்பாக்க முடியும்?

பல முறை புகார் கொடுத்தும் கவனிக்காத மாவட்ட ஆட்சியரையும் காவல் துறையையுமா?

அது சரி என்றால் இப்படி ஒரு சம்பவம் நடக்காவிட்டாலும் இதைவிட கந்துவட்டிக் கொடுமை அதிகம் நடக்கும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பணியில் இருக்கும் அத்தனை பேரையும் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

காரணம் இப்படி  ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதற்காக அவர்கள் அனைவரையும் நல்லவர்களாக நினைக்க முடியாது!அங்கெல்லாம் இத்தகைய கொடுமைகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.

அது சரியா? நடக்குமா?

அவர்களின் பணியாக எது நாடு முழுவதும் நடக்கிறதோ அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

கடன் கொடுத்த கந்துவட்டிக்காரரை முழுப்பொறுப்பாக்கலாமா?

அப்படிச் செய்தாலும் பெரும்பாலான கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

காரணம் இந்த சம்பவத்துக்கு எது காரணமாகச் சொல்லப்படுகிறதோ அதைவிட அதிகமான கொடூரமனம் படைத்த கந்துவட்டிப் பேர்வழிகள் நாடுமுழுக்க இருக்கிறார்கள்.

அதே சமயம் வருவாய்க்கு வேறு வழி இல்லாமல் இருக்கும் கொஞ்சக் காசை வைத்து இதை  ஒரு தொழிலாகச் செய்து பிழைப்பவர்களும் இருக்கிறாகள். அதில் பணத்தைத் தொலைத்து ஓட்டாண்டி ஆனவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் வருவாய்க்காக கந்துவட்டித் தொழில் செய்யும் அனைவரும் கொடூர மனம் படைத்தவர்கள் அல்ல!

இதில் இரக்கமற்ற கெட்டவர்களை மட்டும் பிரித்து நடவடிக்கை எடுக்கவும் முடியாது!

ஆனால் கந்து வட்டித் தொழில் செய்யும் ஒவ்வொருவராலும் மக்கள் கொள்ளை அடிக்கப் படுகிறார்கள்  என்பதில் ஐயமில்லை!

தனது குடும்பத்தையே தீக்கு இரையாக்க முடிவெடுத்த இசக்கிமுத்துவையும் அவருடைய மனைவியையும் பொறுப்பாக்க முடியுமா?

அதுவும் முடியாது! தனது மனைவியும் இந்த முடிவுக்கு இணங்கும்அளவு பாசத்துடன் வாழ்ந்த அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாகலாம்  என்கிற முடிவுக்கு வர மாட்டார்கள்!

தாங்கள் மானத்துடன் வாழ எந்த வழியும் புலப்படாத நிலையில் மாற்று வழி தெரியாத நிலையில் வாழ்வதைவிட சாவது மேல் என்கிற நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைத் தீயில் சுட்டுப் பொசுக்க பெற்ற தாய்க்கு எப்படித்தான் மனம் வந்தது?

தாங்கள்  இருக்கும்போதே வாழ வழியில்லாமல் போன அந்தக் குழந்தைகள் தாங்கள் மடிந்தபின்னால் இதுபோலத் துன்பப்படுவதை அந்தத் தாயால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வளர்ப்பும் வாழ்வும் அழிக்கக்கூடிய தகுதியில் நாட்டு நிலை இல்லை!

அப்படியானால் இந்தக் கொடுமையைத் தவிர்த்திருக்க வாய்ப்பே இல்லையா?

இருக்கிறது . செய்யத்தான் யாரும் இல்லை!

ஆதாவது சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் தடைசெய்து மீறுபவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதே சமயம் வங்கிகள் அனைத்து மக்களுக்கு கடனுதவி செய்ய முடியாத நிலையில் நியாயமாகக் கடன்கொடுத்து வாங்க உதவிகரமான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

கொடுப்பவரின் பணத்துக்கு நியாயமான வட்டியுடன் வாங்கியவர் பணம் திருப்பிக் கொடுக்க வாங்கியவருக்கு சொத்து இருக்கும்வரை  சட்டம் வகை செய்ய வேண்டும்.

சொத்து வசதி இல்லாத முறையான அங்கீகரிக்கப்பட்ட வருவாய் இல்லாத யாருக்கும் கொடுக்கும் கடனுக்கு வாங்கியவரின் நணையமும் யோக்கியதாம்சமுமே பொறுப்பாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் எழுதிவாங்கும் பத்திரங்களுக்கோ செக் போன்றவற்றுக்கோ சட்டம் மரியாதை கொடுக்கக் கூடாது.

சொத்து இருப்பவர்களிடம்கூட  தேதியும் துகையும் எழுதாத வெற்றுப்  பத்திரத்தில்  கையெழுத்து வாங்குவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும். 

ஒவ்வொரு அஞ்சல் நிலையத்திலும் வரிசை எண்ணும் தேதியும் இலவசமாக முத்திரை வைக்கப்பட்ட தனியார் பத்திரங்களும் ஒப்பந்தங்களும் மட்டுமே செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும்.

அதுபோலவே வெற்றுக் காசோலை பெறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அது வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவதையும் தேதியை விருப்பம்போல் எழுதிக் கொள்வதையும் தடுக்கும்.

அதே சமையம் கடன் கொடுத்தவர்களின் பணத்துக்கு அவர்களுக்கு இழப்பு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவமதிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கக் கூடாது.

அவர்களின் இயலாமைக்கு அனுதாபப் பட்டு உதவ சக்தியுள்ளவர் முன்வர வேண்டும்.

காவல்துறையும் அரசு இயந்திரமும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்.

கடனுக்காக சொத்துக்களை இழந்தவர்களைக் கேவலமாகப் பார்ப்பதோ அவர்களே அப்படி நினைப்பதோ கூடாது. அதனால் விபரீத முடிவுக்கு அவசியம் இருக்காது!.

அனைத்தையும் இழந்தாலும் உழைத்துப் பிழைத்து முன்னேறவேண்டும் என்கிற நியாயமான பிடிவாதத்துடன் வாழ்வைத் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.

(இதே இசக்கிமுத்து குடும்பம்கூட அனைத்தையும் உதறிவிட்டு வெளியேறி எத்தனையோ நல்ல மனிதர்களில் ஒருவருடைய பண்ணைகளில் பணிபுரிந்து தாமும் வாழ்ந்து குழந்தைகளையும் வாழவைத்திருக்கலாம்)

இப்படிப்பட்ட நியாய உணர்வுடன் கூடிய சட்ட திட்டங்களும் நாணையத்தை உயிரென மதிக்கும் பண்பாடும் ஊழலற்ற அதிகார வர்க்கமும் உருவாக்கப்பட்டால் இத்தகைய அவலங்கள் இருக்காது!

நடக்குமா?